Tuesday, July 5, 2011

அந்திம நேரம்

மனிதனாக பிறந்த எல்லோருக்கும் அந்திம காலம் உண்டு.அதை எப்படி மேற்கொள்ளவேண்டும் என்பதில் தான் ஒருவருக்கொருவர் சற்று வித்தியாசம் உண்டு.எதையும் பிரிகின்ற நேரம் மனதிற்கு வருத்தம் அளிப்பவைதான்.ஆடு மாடு,வீடு வாசல், சொந்தம் பந்தம் எல்லாமே கோந்து மாதிரி கெட்டியாக பிடித்துகொள்ளும் சமாச்சாரங்கள்.

வாழ்க்கையில் உழல உழல அவைகளின் ஆசாபாசங்கள் நம்மை பற்றிக்கொண்டு எளிதில் துறக்க அதில் திளைத்து இருக்கும் மனம் கொடாது.
இருப்பினும் முதுமை வந்துவிட்டபின் பார்த்தது,உண்டது,களித்தது,அனுபவித்தது போதும் என்கிற மனப்பக்குவம் வராத நிலையில் பிரியப்போகிற சோகம்தான் மிஞ்சி நிற்கும்.அந்த சமயம் நாம் பண்ணின கெட்ட செயல்கள்தான் பூதாகாரமாய் நம் மனம் முன் நிற்கும்.நல்ல செயல்கள் ஏதும் பண்ணியிருந்தால் கூட மனதில் எளிதில் வராது.பயம்,அச்சம்,இருட்டு, போகுமிடம் தெரியாத ஒரு குழப்பம் எல்லாம் ஒரு சேர ஒரு கிலி.மிரள மிரள விழித்துக்கொண்டு,நாக்கு குழற, வாய் கோண மரணத்தை எதிர்கொண்டு பரிதவிப்பின் போது கூட வாய் தப்பி தவறி கூட ஆண்டவனை நினைக்காது.சரோஜா எங்கே,நந்து எங்கே,யச்சுமி எங்கே,நாய் எங்கே,பூனை எங்கே என்று மனைவி மக்களைத்தான் மனம் நாடி தேடி செல்லும்.

ஆனால் அந்த சுற்றமும் சூழமும் உயிர் உள்ள வரை தான்.அப்புறம் நடப்பதே வேறு சமாசாரம் தான்.பட்டினத்தார் அழகாக சொல்லியிருக்கிறார் இந்த பாடலில்


ஊரைக் கூட்டி உரக்க அழுதிட்டு
பேரை மாற்றி பிணமென்று பெயரிட்டு
சூரையம் காட்டிடை கொண்டுபோய்
வைத்திட்டு
நீருல் மூழ்கி நினைவொழிந்தனரே


அதனால் தான் சிவயோகி சித்தானந்தர் அந்த நேரம் வரை காத்திராதே இன்றே இப்போதே ஆண்டவனை நினைவில் கொள் என்று நமக்கு வலியுறுத்துகிறார் இந்த பாடல்களில்.


நீடுகபம் கோழை ஈழை நெருக்கி என்
நெஞ்சை அடைத்திடும் போது-விக்கி
நாவும் குழறியபோது-மனம்
எண்ணிடுமோ தெரியாது-நான்
அன்றுனைக்கூவிட இன்றழைத்தேன் எனை
ஆண்டருள்வாய் ஹரிநாராயணா


உற்றவர் பெற்றவர் மற்றவர் சுற்றமும்
ஓவென்று நின்றழும்போது -உயிர்
ஓசைகள் ஓய்ந்திடும் போது -மனம்
எண்ணிடுமோ தெரியாது-இன்று
பற்றி உனைப் பணிந்தே அழித்தேன் ஆபத்
பாந்தவனே ஹரிநாராயணா


என்பொருள் என்மனை என்றதெல்லாம் இனி
இல்லை என்றாகிடும் போது -மனம்
எண்ணிடுமோ தெரியாது-நீ
அன்றுவரும் பொருட்டின்றழைத்தேன் அருள்
அச்சுதனே ஹரிநாராயணா